மதுரை: தமிழகத்தில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில், கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த விசாரணையில், கள்ளில் போதை அதிகரிக்க பல்வேறு வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பு விளக்கம் அளித்திருந்தது. மேலும், கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்கவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், கள்ளில் வெளிநாட்டு மதுபானங்களை விட குறைவான போதை மட்டுமே இருப்பதாகவும் மனுதாரர் வாதிட்டுள்ளார்.
எனவே, மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கள் இறக்கவும் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மேலும், தனிப்பட்ட மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் தமிழக உள்துறை செயலர் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை செயலரிடம் பதில் கோரியிருந்தது. இருப்பினும், 2020ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு, ஏப்ரல் 27க்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. அதற்குள் பதில் தராத பட்சத்தில், அடுத்த விசாரணையில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
