சென்னை: மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து, பா.ஜ. மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, கேரளம், அசாம், தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களுக்கான பா.ஜ. வேட்பாளர்களை இறுதி செய்யும் நோக்கில், மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு டெல்லியில் நடைபெற்றது.
மேற்காசியப் போரின் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சமாளிக்க, பிரதமர் மோடி பல்வேறு உலகத் தலைவர்களுடனும், சர்வதேச அரசியல் மற்றும் எண்ணெய் வர்த்தக நிபுணர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த காரணங்களால் கடும் பணிச்சுமையில் இருப்பதால், அவர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி நேரத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒவ்வொரு தொகுதியிலும் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் குறித்து மாநில தலைவர்கள் விவரித்தபோது, மோடி தனிப்பட்ட கருத்துக்களையும் பதிவு செய்தார்.
புதிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில், முன்பு வெற்றி பெற்றவர்களை மாற்றியதற்கான காரணம், அதிருப்தி உள்ளதா போன்ற கேள்விகளையும் அவர் எழுப்பியதாக கூறப்படுகிறது. சிலர் குறித்து தனிப்பட்ட முறையில் வாய்ப்பு அளிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், இந்தியா எரிபொருள் இறக்குமதி செய்யும் சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளின் உற்பத்தி தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன. 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவில் தேவை அதிகமுள்ளதால், விலை உயர்வு தவிர்க்க முடியாத சூழல் உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியை மக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாமல் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பா.ஜ. தலைவர்களிடம் மோடி தெரிவித்துள்ளார்.
