திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில், கிராவல் குவாரி என்ற பெயரில் அனுமதி பெற்ற நிலத்தை மீறி, 40 அடி ஆழம் வரை மண் தோண்டி கொள்ளை நடைபெற்றதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
385 பி, சி சர்வே எண்களில் உள்ள 1.47 ஏக்கர் தரிசு நிலத்தில் கிராவல் மண் எடுக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் மாவட்ட கனிமவள துறையிடம் அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இடத்தைத் தாண்டி சுற்றியுள்ள அரசு மற்றும் விவசாயிகளின் 14 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விதிமுறையின்படி 3 மீட்டர் (சுமார் 10 அடி) ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி இருந்தபோதிலும், பொக்லைன் இயந்திரங்களின் மூலம் 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான மண் கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கிராம மக்கள் கடந்த மூன்று மாதங்களாக கலெக்டர், கனிமவளம், காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
குவாரி நடத்துபவர் ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தற்போது மண் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் குவாரி பகுதியை நேரில் பார்வையிட்டபோது, விவசாய நிலங்கள் சுரங்கம் போல ஆழமாக தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் நெல், பூ மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது 40 அடி ஆழம் வரை மண் அகற்றப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்,” என தெரிவித்தனர்.
