புதுடில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள மார்க் கார்னி, முதலில் மும்பையில் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்தார். பின்னர் டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் வர்த்தகம், எரிசக்தி, கனிம வளங்கள், விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குறிப்பாக யுரேனியம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் கனடா கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்றும், இது இருநாட்டு உறவுகளில் முக்கியமான தருணமாகும் என்றும் கூறினார்.
மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலைமை இந்தியாவுக்கு கவலை அளிப்பதாகவும், அனைத்து மோதல்களுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மேற்காசிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா தொடர்ந்து அந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதம் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் மனிதகுலத்திற்கே பெரும் சவாலாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இதற்கிடையில் இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரது மனைவி டயானாவுக்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர்.
