சென்னை: சென்னையில் இருந்து டில்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பணியில் இருந்த விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக, திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு இண்டிகோ விமானம் டில்லிக்குப் புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு ஆண் பயணிகள் மது போதையில் விமான பணிப்பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் இருக்கையில் அமராமல் எழுந்து நின்று பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்து அவதூறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பணியின் காரணமாக அந்த இடத்துக்கு வந்த பணிப்பெண்ணிடம் அவர்கள் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள் டில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பணிப்பெண் திரும்பியதும், மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் விமானத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கை விவரங்களை ஆய்வு செய்து இருவரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
அதில் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த பிரபாகரன் (36) என்பவர் திருவள்ளூர் நகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலர் என்பதும் தெரியவந்தது.
மற்றொருவர் திருவள்ளூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தியாகு (36) என்பதும், அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில், டில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அவர்கள் நேற்று முன்தினம் சென்னை வந்தபோது, மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
