டில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டில்லி சென்ற அவர், அமித்ஷாவை நேரில் சந்தித்து அரசியல் சூழ்நிலை மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு டில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உருவாகி வரும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்தார்.
மேலும் வரவிருக்கும் தேர்தலில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக அவர் கூறினார்.
சசிகலா புதிய கட்சி தொடங்கிய விவகாரம் குறித்து இந்த சந்திப்பில் எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாகவும், கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் நிலவி வருகிறது என்றும், அதிமுக கூட்டணி சுமுகமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.
