நாமக்கல்: கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்ததால், அனைத்து துறைகளிலும் ஊழல் புற்றுநோய் போல பரவியுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வரிப்பணியை மக்களுக்கே பயனளிக்கும் வகையில் மக்கள் நலத் திட்டங்களாக திருப்பி வழங்கும் பணியை முதல்வர் முன்னெடுத்து வருவதாக கூறினார்.
ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று குறித்து பேசிய அமைச்சர், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றார். மாநிலம் முழுவதும் உணவகங்களில் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 97 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் உயர் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முதல்வருடன் ஆலோசித்து புதிய பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மருத்துவத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
அரசியல் குறித்துப் பேசிய அவர், “கடந்த 60 ஆண்டுகளாக இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்ததால் அனைத்து துறைகளிலும், நிர்வாகத்திலும் ஊழல் புற்றுநோய் போல பரவியுள்ளது. தற்போது தலைமை சரியாக இருப்பதால் அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி அனைத்து துறைகளிலும் படிப்படியாக ஊழல் குறையும்” என்று தெரிவித்தார்.
