புதுடில்லி: மத்திய அரசு துறைகளில் குறுகிய காலத்திற்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் கீழ், மேலும் 51,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி 2022ஆம் ஆண்டு தொடங்கி வைத்த இந்த வேலைவாய்ப்பு முகாம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 18 முறை நடைபெற்றுள்ள இந்த முகாம்கள் மூலம் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 19வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி நேற்று டில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டு, 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு நான் மேற்கொண்ட பயணங்களின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள், இந்திய இளைஞர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் திறமையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
