கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடிக்கு மசாலா பொரி விற்ற கடை உரிமையாளருக்கு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சர்வதேச எண்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற இரு கட்ட சட்டசபை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை அமைத்தது.
தேர்தல் பிரசாரத்தின் போது ஜார்கிராம் பகுதியில் உள்ள சாலையோர கடைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மசாலா பொரி வாங்கி சாப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் கவனம் பெற்றது.
இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரான விக்ரம் குமார் சமூக வலைதளங்களில் பிரபலமானார். அவரது கடைக்கு ஏராளமானோர் வந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
பீஹாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் குமார், தற்போது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சர்வதேச எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து மிரட்டல் செய்திகள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சிலர் வீடியோ அழைப்பில் தோன்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி, அவரது கடையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டியதாகவும் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
