சென்னை: பாஜ, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியார்.
அவர் கூறியதாவது: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது அறிவிக்கப்படும்.
திமுக கூட்டணி தலைவர்கள் எங்கள் கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். ஆனால், தேஜ கூட்டணி உணர்வுப்பூர்வமாக அமைக்கப்பட்ட வெற்றி கூட்டணி ஆகும். 210 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறும்; அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
நாங்கள் டில்லிக்கு சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலின் வாடிக்கை. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்துவது இயல்பு. ஆனால், நாங்கள் டில்லி செல்லும் போது தோல்வி பயம் காரணமாக அவர் அச்சப்படுகிறார்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த டில்லி சென்றோம். கூட்டணி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் கடந்த 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. இன்று காலை தலைவர்கள் வந்து, மதியம் முடிவு செய்து, மாலையே அறிவித்துவிட்டோம்.
காங்கிரஸ் மற்றும் திமுக இடையே 20 நாட்கள் வார்த்தைப் போர் நடந்தது. ஆனால் எந்த ஊடகமும் அதை விவாதிக்கவில்லை. எங்கள் கூட்டணியின் நோக்கம் மக்கள் விரோத திமுக அரசை அகற்றுவதாகும்.
திமுக கூட்டணியில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது. மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுடன் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் பெற்ற கட்சிகள், இந்த முறை 5 தொகுதிகளுக்காக அலைந்து வருகின்றனர் எனவும் அவர் விமர்சித்தார்.
மேலும், கனிமொழி டில்லி சென்றது ஏன்? காங்கிரஸ் தலைவரை சந்தித்ததன் மூலம் ஏதேனும் முடிவு எட்டப்பட்டதா? கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆலோசனை நடத்துவது இயல்பு தான். ஆனால் திமுகவில் நிலவும் இழுபறியை கவனிக்க வேண்டும் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.
