ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படை அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மகேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் 9 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், போலீசில் புகார் அளித்தபோதும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்று கூறி வழக்கை முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே வழக்கை மீண்டும் விசாரிக்கவும், இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். விக்டோரியா கவுரி, திருடுபோன சொத்தின் மதிப்பில் 30 சதவீதத்தை தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் மனுதாரருக்கு இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு திருடுபோன நகைகள் மீட்கப்பட்டால், வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மனுதாரரிடமிருந்து அரசு திரும்பப் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதன் முன்னேற்றத்தை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் வழக்கை சிறப்பு விசாரணை அமைப்பிடம் மாற்றலாம் என்றும் குறிப்பிட்டது.
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக “கண்டுபிடிக்க முடியாதவை” என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், அந்த குழுக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் ஊதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குற்றவாளிகளை கண்டறியும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியும் வழங்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
