உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்டு-32’ நாக் அவுட் போட்டியில், ஸ்டாப்பேஜ் நேரத்தில் அடிக்கப்பட்ட கோலின் உதவியுடன் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரேசில் அணி, 17-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்கவில்லை.
ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கைஷு சானோ கோல் அடித்து ஜப்பானுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன்பிறகு பிரேசில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், ஜப்பான் வீரர்களின் தற்காப்பு ஆட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஜப்பான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 56-வது நிமிடத்தில் கேப்ரியல் அனுப்பிய பந்தை கேஸ்மிரோ தலையால் முட்டி கோலாக மாற்றி பிரேசிலுக்கு சமநிலையை பெற்றுத் தந்தார். தொடர்ந்து வினிசியஸ் ஜூனியர் கோல் அடிக்க முயன்றபோதும், ஜப்பான் கோல்கீப்பர் ஜியான் சுசூகி சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.
ஆட்டம் கூடுதல் நேரத்தை எட்டிய நிலையில், 90+5-வது நிமிடத்தில் புருனோ குய்மரேஸ் வழங்கிய பாஸை சிறப்பாக பயன்படுத்திய கேப்ரியல் மார்டினெல்லி வெற்றிக்கான கோலை அடித்தார். இதன்மூலம் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்த சுற்றில் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பிரேசில் அணி, ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.
