34 ஆயிரம் இருக்கைகளுக்கு 84 லட்சம் விண்ணப்பங்கள்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கடும் கிராக்கி!
புதுடெல்லி: 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெற ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வெறும் 34 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியைக் காண 83,97,294 டிக்கெட் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள இத்தொடரில் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் அக்டோபர் 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
இந்த மைதானத்தில் சுமார் 34 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமர முடியும். ஆனால், இந்தப் போட்டியைக் காண 83,97,294 பேர் டிக்கெட் பெற விண்ணப்பித்துள்ளனர். மைதானத்தின் இருக்கை வசதியைவிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். அதிலும் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும். இந்த முறை கிடைத்துள்ள வரவேற்பு ஐசிசி நிர்வாகத்தையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இறுதிப்போட்டிக்கும் அதிக வரவேற்பு
இதே வாண்டரர்ஸ் மைதானத்தில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காணவும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தப் போட்டிக்காக 79,00,944 டிக்கெட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் காண இதுவரை 12 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் பெறுவது எப்படி?
உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் ரசிகர்கள் முதலில் ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் கிடைத்தால், குலுக்கல் முறையில் டிக்கெட் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை இதில் பின்பற்றப்படாது.
விண்ணப்பத்தைப் பதிவு செய்யும்போது எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டால், டிக்கெட் வாங்குவதற்கான அடுத்தகட்ட விவரங்கள் ரசிகர்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
