32 சர்வதேச உயரிய விருதுகள் பெற்ற பிரதமர் மோடி; புதிய சாதனை
சென்னை: உலகின் பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். 2016 முதல் 2026 வரை மொத்தம் 32 சர்வதேச விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டில் ஸ்வீடன் வழங்கிய “ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்”, இஸ்ரேலின் “ஸ்பீக்கர் ஆப் தி நீசெட் மெடல்”, நார்வே நாட்டின் “கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட்” உள்ளிட்ட உயரிய விருதுகளை மோடி பெற்றுள்ளார்.
2025-ஆம் ஆண்டில் ஓமன், எத்தியோப்பியா, நமீபியா, பிரேசில், டிரினிடாட் & டொபாகோ, கானா, இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களின் உயரிய விருதுகளை வழங்கின. இதில் “ஆர்டர் ஆப் ஓமன்”, “கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா”, “கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ்” போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கவை.
2024-ஆம் ஆண்டில் பார்படாஸ், குவைத், கயானா, டொமினிகா, நைஜீரியா, ரஷ்யா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் மோடியை கவுரவித்தன. ரஷ்யாவின் “ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல்” மற்றும் பூடானின் “ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ” உள்ளிட்ட விருதுகள் அப்போது வழங்கப்பட்டன.
2023-ஆம் ஆண்டில் கிரீஸ், பிரான்ஸ், எகிப்து, பிஜி மற்றும் பலாவு நாடுகள் உயரிய விருதுகளை வழங்கின. இதில் பிரான்ஸ் வழங்கிய “கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்” உலகளவில் முக்கிய கவனம் பெற்றது.
இதற்கு முன்னர் 2020-ஆம் ஆண்டு அமெரிக்கா “லீஜியன் ஆப் மெரிட்” விருதையும், 2019-ஆம் ஆண்டு பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் உயரிய விருதுகளையும் வழங்கின.
2018-ஆம் ஆண்டு பாலஸ்தீனம் “கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன்” விருதை வழங்கியது. 2016-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் உயரிய விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன.
சர்வதேச நாடுகளின் இந்த அங்கீகாரங்கள், இந்தியாவின் உலகளாவிய உறவுகள் மற்றும் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
