‘சிக்கன் நெக்’ சாலை திட்டத்திற்கு பாஜ அரசு ஒப்புதல்; விரைவில் விரிவாக்கப் பணிகள்
கோல்கட்டா: இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழித்தடமாக கருதப்படும் ‘சிக்கன் நெக்’ பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு மேற்கு வங்கத்தின் புதிய பாஜ அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இதில் மேற்கு வங்கத்துடன் மட்டும் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்து கொள்கிறது. இந்த பகுதியில் இந்தியாவின் பிற மாநிலங்களையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் முக்கியமான ‘சிக்கன் நெக்’ அல்லது சிலிகுரி வழித்தடம் அமைந்துள்ளது.
நேபாளம், பூடான் மற்றும் சீனா நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த 22 கிலோமீட்டர் அகல வழித்தடம், இந்தியாவுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு பகுதியாக கருதப்படுகிறது. வரைபடத்தில் கோழியின் கழுத்தைப் போன்ற தோற்றம் கொண்டதால் இதற்கு ‘சிக்கன் நெக்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த வழித்தடம் வழியாக செல்லும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மொத்தம் ஏழு சாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. குறிப்பாக 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட பதற்றம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் காரணமாக, பாதுகாப்பான மற்றும் அகலமான சாலை அமைப்பது அவசியம் என பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், இந்த திட்டங்களுக்கு தேவையான நிலங்களை ஒப்படைப்பதில் திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா அரசு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ அரசு அமைந்துள்ள நிலையில், சிக்கன் நெக் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அரசின் முடிவை மாற்றி, ஏழு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் ஒப்படைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த திட்டங்கள் சுற்றுலா, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய இணைப்புக்கு மிகவும் முக்கியமானவை. பருவமழை மற்றும் நிலச்சரிவு காலங்களில் சிக்கிமிற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சாலை மேம்பாடு மூலம் அந்த சிக்கல்கள் குறையும்,” என்றார்.
மேலும், இந்த நெடுஞ்சாலைகள் சிக்கிம், பூடான் மற்றும் வங்கதேசத்துடனான இணைப்பை வலுப்படுத்துவதோடு, டார்ஜிலிங் மலைப்பகுதி, வடக்கு வங்காளம், மால்டா மற்றும் முஷிதாபாத் வழியாக பீஹார் – மேற்கு வங்க இணைப்பையும் மேம்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முர்ஷிதாபாத், நாடியா மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் வழியாக இந்தியா – வங்கதேச எல்லை வரை செல்லும் முக்கிய சாலைகளின் தரமும் இந்த திட்டத்தின் மூலம் உயர்த்தப்பட உள்ளது.
