தமிழக அமைச்சரவை மே 21ல் விரிவாக்கம்; காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவி
சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசின் அமைச்சரவை மே 21ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 22 துறைகளுக்கு தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில், ஏற்கனவே உள்ள சில அமைச்சர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேக்கர் கேரளாவில் உள்ள நிலையில், அவர் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன. கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தவெக அரசை ஆதரித்து வரும் வேலுமணி – சண்முகம் தரப்பு அதிமுக உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சட்ட நுணுக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், நாளைக்குள் அரசு தரப்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
