ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக 220 ரன்களுக்கு மேல் குவித்த போட்டிகளில் 100 சதவிகித வெற்றியை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நேற்றிரவு ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களுக்கு மேல் எடுத்த 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாட் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஹைதராபாத் அணியின் பேட்டிங் முறையே மாறியுள்ளது. தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் அந்த அணி, குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்து எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பவர்பிளேவில் கூட இவ்வளவு அதிரடியாக ரன்கள் சேர்க்க முடியும் என்பதை ஐபிஎல் தொடரில் நிரூபித்த அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பார்க்கப்படுகிறது.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணியாகவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. தற்போது அந்த அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலிலும் முன்னிலை வகித்து வருகிறது.
