சென்னை: தமிழகத்தில் 22 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாததும், 18.60 சதவீத பள்ளிகளில் பயன்படுத்த முடியாத கழிப்பறைகள் உள்ளதும் மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என, தமிழக பாஜ தொழில் துறை வல்லுநர் அணித் தலைவர் எஸ். சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜ தொழில் துறை வல்லுநர்கள் பிரிவு, திமுக ஆட்சியில் கல்வித் துறை நிலை குறித்த “வகுப்பறைகள் நெருக்கடியில்” என்ற தலைப்பில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாம் வகுப்பு அளவிலான வாசிப்பை கூட செய்ய முடியவில்லை என்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களில் 60 சதவீதம் பேர் அடிப்படை கணக்கீட்டில் தோல்வியடைகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இது கல்வித் தரம் குறைந்ததற்கான முக்கிய சான்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்பக் கல்வி இடைநிற்றல் விகிதம் 2.7 சதவீதம் என இருந்தாலும், உயர்கல்வி இடைநிற்றல் 8.50 சதவீதமாக இருப்பது கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்திருப்பதை காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதுடன், தனியார் பள்ளிகளில் சேர்க்கை 5.17 லட்சத்தில் இருந்து 5.62 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அரசு கல்வி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என அறிக்கை கூறுகிறது.
மேலும், 18,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், 3,600க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கற்றல் தரத்தை நேரடியாக பாதிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைப்பில் அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 22% பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாததும், 18.60% பள்ளிகளில் பயன்படுத்த முடியாத கழிப்பறைகள் இருப்பதும் மாணவர்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு அமைப்பு சீர்குலைந்துள்ளதாகவும், மாணவர் தற்கொலை எண்ணிக்கையில் 1,300க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்கு 44,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டாலும், 2017 முதல் கற்றல் முன்னேற்றத்தில் மாற்றம் இல்லை எனவும், 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் இல்லாததும், 1,200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புதிய சேர்க்கை இல்லாததும் கல்வித்துறையின் சவால்களை காட்டுகிறது என அறிக்கை கூறுகிறது.
மேலும், கேரளா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் குறைந்த வளத்திலும் சிறந்த கற்றல் முடிவுகளை அடைந்துள்ள நிலையில், தமிழகம் பின்தங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் 4,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
