புதுடில்லி: தமிழகத்தில் லோக்சபா எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39 லிருந்து 59 ஆக உயர்த்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் அவர் பேசியபோது, தொகுதி மறுவரையறை மற்றும் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்ற கருத்து தவறானது என்றும், தேவையற்ற குழப்பம் ஏற்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
இந்த மாற்றங்கள் மூலம் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது என்றும், மாறாக தொகுதிகள் அதிகரிப்பதன் மூலம் பிரதிநிதித்துவம் வலுப்பெறும் என்றும் அவர் விளக்கினார்.
கர்நாடகாவில் தற்போது 28 எம்.பி. தொகுதிகள் உள்ள நிலையில், புதிய மாற்றத்திற்குப் பிறகு அது 42 ஆக உயரும் என்றும், அதன் பிரதிநிதித்துவ சதவீதம் பெரிதாக மாறாது என்றும் கூறினார்.
ஆந்திராவில் 25 தொகுதிகள் 38 ஆகவும், தெலுங்கானாவில் 17 தொகுதிகள் 26 ஆகவும், கேரளாவில் 20 தொகுதிகள் 30 ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தென் மாநிலங்களின் மொத்த எம்.பி. எண்ணிக்கை தற்போது 129 ஆக (23.76%) உள்ள நிலையில், புதிய சட்டத்தின் மூலம் அது 195 ஆக (23.97%) உயரும் என்றும், இதனால் எந்த குறைவும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த தொகுதி மறுவரையறை மசோதாவில் எந்த புதிய மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும், முந்தைய சட்டத்தையே நீட்டித்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வராது என்றும், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை, பார்லிமென்ட் ஒப்புதல் மற்றும் ஜனாதிபதி அங்கீகாரம் ஆகியவை கிடைத்த பிறகே நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
அதனால், 2029ம் ஆண்டுக்கு முன்பு இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை என்றும், அதுவரை தற்போதைய தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
