வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கனவு அரசு மட்டுமின்றி மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும், அதற்கான அடித்தளமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து சீர்திருத்தங்களும் மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அவை அரசின் செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பயணத்தையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், நிர்வாக அமைப்புகள் மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்கால தேவைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தீவிரமான பிரச்சினையாகக் கருதி ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
விளையாட்டு சுற்றுலா உலகளவில் வளர்ந்து வரும் நிலையில், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தி இந்தியாவை உலகின் முக்கிய விளையாட்டு மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
