சென்னை: சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? என தவெக தலைவர் விஜய் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கையில், திமுகவின் ₹8000 கூப்பன் திட்டத்தைச் சுற்றியுள்ள விவகாரத்தில், திருச்சி மண்ணச்சநல்லூரில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி மனதை பதறவைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மக்களை ஏமாற்றுவதை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் ₹8000 வழங்கப்படும் என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகிறது என விமர்சித்தார்.
2026 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஏமாற்றி வெற்றியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்படுகிறது என்றும், அதன் தோல்வி பயத்தின் அறிகுறிதான் இந்த ₹8000 கூப்பன் அறிவிப்பு என்றும் விஜய் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் சதுரங்க வேட்டையாக மாறிவிட்டதா என்றும், அதிகாரப் பசியால் அப்பாவிகளை ஏமாற்றுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த ₹8000 கூப்பன் விநியோகத்தின் போது திமுகவினரின் ஆபாச பேச்சால் மன உளைச்சலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி, மு.க. ஸ்டாலின் அவர்களின் மனசாட்சியை உலுக்கவில்லையா என்றும் அவர் கேட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், மக்களை ஏமாற்றும் இத்தகைய நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
