புவனேஸ்வர்: ஒடிஷாவில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ. ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்ததாகக் கூறப்படும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியான 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 26 இடங்கள் போட்டியின்றி நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 11 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதன்படி, ஒடிஷாவில் 4, பீஹாரில் 5 மற்றும் ஹரியானாவில் 2 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. பீஹாரில் அனைத்து 5 இடங்களையும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. ஹரியானாவில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்தை வென்றன.
ஒடிஷாவில் நான்கு இடங்களுக்கு ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டதால் கடும் போட்டி நிலவியது. இதில் இரண்டு இடங்களில் பா.ஜ. வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பிஜு ஜனதா தள வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், நான்காவது இடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டது.
பா.ஜ. ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ராய் மற்றும் பிஜு ஜனதா தள வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே கடுமையான போட்டி நிலவியது. காங்கிரசின் 14 எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டாவுக்கு ஆதரவு அளித்ததால், அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத வகையில் திலீப் ராய் வெற்றி பெற்றார். அவருக்கு பிஜு ஜனதா தளத்தின் சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் ரமேஷ் ஜெனா, சோபியா பிர்தவுஸ், தசரதி காமாங் ஆகிய மூவரையும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கட்டாக் நகர காங்கிரஸ் தலைவர் கிரிபாலா பெஹேராவும் நீக்கப்பட்டுள்ளார்.
