வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து வழித்தடம் அனைத்து நாடுகளுக்கும் திறந்தே இருக்கும் என்றும், அதனை அமெரிக்கா கண்காணிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து பேசிய அவர், Iran தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
“ஈரானின் கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பல திறன்கள் முற்றிலும் சிதைந்துவிட்டன. தற்போது அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்றும், ஒன்று ஒப்பந்தம் செய்து பிரச்சினையை தீர்ப்பது, மற்றொன்று தாக்குதல் நடத்தி முடிவுக்கு கொண்டு செல்வது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி குறித்து அவர் கூறுகையில், “கப்பல் போக்குவரத்து பாதை அனைவருக்கும் திறந்தே இருக்கும். அமெரிக்கா அதனை கண்காணிக்கும். ஆனால் எந்த நாடும் அதனை கட்டுப்படுத்த அனுமதிக்கப்படாது” என்றார்.
ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், அந்நாட்டில் பணவீக்கம் 250 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஈரான் நாணயத்தின் மதிப்பு சரிந்துவிட்டதாகவும், அந்நாட்டின் பொருளாதார அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும், அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்தவித பொருளாதார சலுகைகளும் இன்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். மேலும், அந்த யுரேனியத்தை Russia அல்லது Chinaவிடம் ஒப்படைப்பதையும் அமெரிக்கா ஏற்காது என்று தெரிவித்தார்.
