ஜெருசலேம்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களால், யுரேனியம் செறிவூட்டும் திறனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனும் ஈரான் இழந்துவிட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி, “எங்கள் திறன் குறையவில்லை; எதிரிகள் சோர்வடையும் வரை போர் தொடரும்” என தெரிவித்திருந்தார். ஆனால், இந்த கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த 28ஆம் தேதி இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், போர் குறித்து கருத்து தெரிவித்த நெதன்யாகு, “ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் எதிர்பார்ப்பதை விட இந்த போர் விரைவில் முடிவடையும்,” என கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது என்றும், உலக பாதுகாப்பில் அதன் பங்கு பெரியது என்றும் தெரிவித்தார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்புடன் தன்னுடைய கருத்து ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று வாரங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களால், ஈரானின் ராணுவ திறன் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுத கிடங்குகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் குறிவைத்து தாக்கப்படுகின்றன.
ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேலின் தனிப்பட்ட முடிவு எனவும், டிரம்பின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு கூடுதல் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நெதன்யாகு கூறினார்.
இதுவரை வான்வழி தாக்குதல்கள் மட்டுமே நடைபெற்று வந்தாலும், தரைவழி தாக்குதலுக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் ஆட்சியில் குழப்பம் நிலவி வருவதாகவும், அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்குள் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதல் எதிர்காலத்தில் புரட்சியை நோக்கி நகருமா என்பது குறித்து தற்போது கணிக்க முடியாது என்றும், அதன் தீர்மானம் ஈரான் மக்களின் கையில் தான் உள்ளது என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
