வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க, கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா – ஈரான் மோதல் காரணமாக உலகின் முக்கியமான எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதற்காக ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் ஆதரவு கோரப்பட்டாலும், எந்த நாடும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
இந்நிலையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் கார்க் தீவை இலக்காக கொண்டு, அதனை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா சிந்தித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் விதிக்கும் கட்டுப்பாடுகளை தகர்க்கும் நோக்கில் இந்த திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
கடற்கரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமாக உள்ளது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், ஹார்முஸ் பகுதியைச் சுற்றியுள்ள ஈரானின் ராணுவ இருப்பை பலவீனப்படுத்த அமெரிக்கா தாக்குதல்களை தொடர்ந்துவருகிறது. தீவை கைப்பற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்காக கூடுதல் படைகள் அனுப்பப்படலாம் என்றும், ஏற்கனவே பல கடற்படை பிரிவுகள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல்கள் மூலம் ஈரானின் சக்தியை குறைத்து, பின்னர் பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க கட்டாயப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
