“வயநாட்டை ராகுல், பிரியங்கா மறந்துவிட்டனர்” – காங்கிரஸ் அலுவலகத்தில் போஸ்டர் பரபரப்பு
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியை ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் மறந்துவிட்டதாக கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்த அவர், அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனது சகோதரி பிரியங்கா காந்தியை போட்டியிடச் செய்தார். அதில் பிரியங்கா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது.
நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி.சதீஷன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் பதவிக்காக ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் கே.சி.வேணுகோபால் முயற்சி செய்ததாக கூறப்பட்டாலும், அது பலனளிக்கவில்லை.
இந்த அரசியல் சூழலில், வயநாடு பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில், “வயநாட்டை ராகுலும், பிரியங்காவும் மறந்துவிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கே.சி.வேணுகோபால் உங்களின் பையை தூக்குபவராக இருக்கலாம் ராகுல்; ஆனால் கேரள மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்” என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு போஸ்டரில், “இதேபோன்ற முடிவுகள் தொடர்ந்தால், அமேதி அளித்த தீர்ப்பையே வயநாடும் அளிக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒருவர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
