இந்தியாவின் டாப் 5 முதலீட்டாளர்களில் நெதர்லாந்தும் ஒன்று: பிரதமர் மோடி
தி ஹேக்: “இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள முதல் ஐந்து நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்துக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், செமி கண்டக்டர்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நீர்வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா – நெதர்லாந்து உறவு மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் முதல் ஐந்து முதலீட்டு நாடுகளில் நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் உறவுகள் மிகவும் ஆழமானவை” என்றும் குறிப்பிட்டார்.
“இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம், இந்தியா – நெதர்லாந்து உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து, “எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், செமி கண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய இந்தியாவிற்கு வருமாறு அழைக்கிறேன்” என்றார்.
“தொழில் செய்வதை எளிதாக்கும் பல்வேறு சீர்திருத்தங்களை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது” என்றும் அவர் கூறினார்.
மேலும், “கடந்த 12 ஆண்டுகளில் தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளோம். தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவது எங்கள் நோக்கமாக உள்ளது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவின் டாடா நிறுவனமும் நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “குஜராத்தின் தோலேராவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவும் செமி கண்டக்டர் ஆலையின் உற்பத்தியை மேம்படுத்த ஏ.எஸ்.எம்.எல் நிறுவனம் ஆதரவளிக்கும்” என்றார்.
“செமி கண்டக்டர் துறையில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றங்கள், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். எதிர்கால வளர்ச்சியில் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
