வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: கேரளாவில் இடதுசாரி – பா.ஜ., இடையே மோதல்
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில், வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, காங்., – ஐ.யு.எம்.எல்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் மற்றும் மலையாள மொழிப் பாடல் பாடப்பட்டன. இதில், ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து சரணங்களும் பாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது ரியாஸ் கருத்து தெரிவிக்கையில், “அதிகாரப்பூர்வமாக வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் நிலையில், முழு பாடலும் ஏன் பாடப்பட்டது? முதல் இரண்டு சரணங்களைத் தாண்டிய பகுதிகள் வரலாற்று ரீதியாகவே சர்ச்சைக்குரியவையாக இருந்து வருகின்றன. இதனை கட்டாயமாக்கும் முயற்சிகள் அரசியலமைப்பு சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன,” என்றார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ., மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், “அரசியல் காரணங்களுக்காகவே தேசிய பாடலை இடதுசாரிகள் அவமதிக்கின்றனர். நாட்டின் மரபுகள் மற்றும் கலாசாரத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர். வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை,” என்று கூறினார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பதவியேற்பு விழாவை கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்ததாகவும் காங்., அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் Vijay தமிழக முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
