லஞ்ச புகாரை விசாரிக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் டிஎஸ்பி ஜாய் தயாளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வருவாய் துறை அதிகாரி ஒருவர் மீது லஞ்ச புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, பணம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படாது என கூறி லஞ்சம் கேட்டதாக அதிகாரி புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து, ஐஜி துரைகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இன்ஸ்பெக்டர் விமலா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் டிஎஸ்பி ஜாய் தயாள் ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
