ரூ.300 கோடி மோசடி நபருடன் புகைப்படம்; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சிவகுமார் என்பவர் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் சேலம் சென்றபோது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, ‘வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலபர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் பொதுமக்களிடம் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் சிக்கிய சிவகுமார் என்பவரும் அமைச்சரை சந்தித்ததாக தகவல் வெளியானது.
மேலும், சிவகுமார் அமைச்சர் செங்கோட்டையனுக்கு சால்வை அணிவித்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையடுத்து, “ஆளும் கட்சியான த.வெ.க.வில் சிவகுமார் இணைந்துவிட்டதால், அவருக்கு எதிரான வழக்குகள் பலவீனப்படுத்தப்படலாம்” என பாதிக்கப்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் அமைச்சராக பொறுப்பேற்றதற்காக ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்தினர். அந்த கூட்டத்துடன் சிவகுமார் என்பவரும் வந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அவருடன் எனக்கு எந்தவிதமான அறிமுகமோ தொடர்போ கிடையாது. கூட்டத்தில் ஒருவராக வந்தவரை த.வெ.க.வில் இணைந்ததாக தவறான தகவல் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
