சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 200 பணியாளர்கள் கடந்த 20 நாட்களில் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில், மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால் மதுபானம் வாங்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் இந்த நடைமுறை தொடர்ந்ததால், அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து, அனைத்து மாவட்ட மேலாளர்களும் மதுக்கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் தொகை வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், இந்த நடவடிக்கையில் அலட்சியம் காட்டும் மாவட்ட மேலாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த 20 நாட்களில் மட்டும் மது பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலித்த 200 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
