காஜியாபாதில், நாடு முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை ரகசிய கேமராக்கள் மூலம் படம்பிடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய உளவு கும்பலைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காஜியாபாத் மாவட்டம் கவுசாம்பி பகுதியில் கடந்த 15ஆம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெண் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில் மேலும் பலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் சந்தேக நபர்களின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேபாளம், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மேலும் பலர், அதில் ஐந்து சிறுவர்களும் அடங்கிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
காஜியாபாத் கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜ் கரண் நாயர் கூறுகையில், இந்த கும்பலின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் சுஹைல் மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பீஹாரைச் சேர்ந்த நவுஷத் அலி மற்றும் பாஹல்பூரைச் சேர்ந்த சமீர் ஆகிய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
விசாரணையில், டில்லி கன்டோன்மென்ட் மற்றும் ஹரியானாவின் சோனிபட் ரயில் நிலையங்களில் சூரிய சக்தியில் இயங்கும் ரகசிய சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்தது கண்டறியப்பட்டது.
இந்த கேமராக்களில் பதிவான காட்சிகள், சிறப்பு மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டன.
நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய கேமராக்களை பொருத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள், மொபைல் சரிசெய்யும் நிபுணர்கள், சிசிடிவி ஆப்பரேட்டர்கள் போன்றவர்களை பணம் கொடுத்து இந்த உளவு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், பயன்படுத்தப்படாத சிம் கார்டுகளை வழங்க வைத்து, அவற்றை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்தே வாட்ஸாப் கணக்குகள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
