சண்டிகரில், சட்டவிரோத முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அல்-பலாஹ் பல்கலையை ஹரியானா அரசு தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி டில்லி அருகே செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் டாக்டர் உமர் நபி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், அவரது கூட்டாளிகளாக கருதப்படும் சில டாக்டர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், உமர் நபி மற்றும் கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷகீல், ஷாஹின் ஷாஹித் ஆகியோர் ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல்-பலாஹ் பல்கலையில் பணியாற்றியிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்புகள் அங்கு விசாரணை மேற்கொண்டன. அப்போது, மாணவர்களிடமிருந்து சட்டவிரோதமாக கட்டணம் வசூலித்து, பல்கலை நிர்வாகம் சுமார் 493 கோடி ரூபாய் அளவில் முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து, பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்தது. மேலும், 140 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்கலை சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்த சூழலில், அல்-பலாஹ் பல்கலையை முழுமையாக ஹரியானா அரசு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
பல்கலையின் நிர்வாக பொறுப்பை கவனிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி அத் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
