சென்னை: தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்செயல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பாலியல் வன்கொடுமைகள் 2,080 என்றும், ‘போக்சோ’ வழக்குகள் 39,999 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தி.மு.க. ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்” என்ற வாசகமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதனுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த குற்றச்செயல்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகள் மற்றும் வீடியோ காட்சிகளும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
