புதுடில்லி: மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அந்த பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருவதால், அங்குள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலின்போது அந்த நாடுகளில் நடந்த தாக்குதல்களை மோடி கண்டித்ததுடன், அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களை பாதுகாத்ததற்காக நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
