இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள் மீது தலிபான் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இடையே பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பிரச்சினையால் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் டெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பிற்கு தலிபான் அரசு ஆதரவு வழங்குகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் காபூல் மற்றும் கந்தஹார் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் 133 தலிபான் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலடியாக தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 53 இடங்களில் தாக்குதல் நடத்தி, 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான இந்த மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் கட்டளை மையங்களை குறிவைத்து தலிபான் படைகள் ஆயுதம் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டு மையமும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த தளம் கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தாக்கப்பட்ட இடமாகும்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12வது டிவிஷன் தலைமையகம், கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள க்வாஸாய் ராணுவ முகாம் உள்ளிட்ட பல கட்டளை மையங்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானியை தலிபான் படைகள் உயிருடன் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
