திருச்சி: மேற்காசியாவில் நடைபெறும் போர் குறித்து நாட்டின் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்தியர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழகத்தின் நாடித் துடிப்பை என்னால் தெளிவாக உணர முடிகிறது. ஆடி மாதத்தில் காவிரி நதி கரைபுரண்டு ஓடும் போல, வரும் சட்டசபை தேர்தலில் மாற்றத்திற்கான மக்களின் விருப்பமும் அதிகரித்து வருகிறது.
ஒரே குடும்பத்தில்
ஆட்சியிலிருந்து தி.மு.க.வை நீக்க வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்புகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தைப் போல மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மதுரையிலிருந்து உலகின் பல நகரங்களுக்கு விமான போக்குவரத்து எளிதாகும்.
இதனால் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும். காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லி மாலை நேரத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரங்களுக்கு சென்று சேரும்.
2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தனது கடமையை செய்யாமல் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் ஒரே குடும்பத்தில் தொடங்கி ஒரே குடும்பத்திலேயே முடிகிறது.
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாறலாம். ஆனால் அதிகாரம் ஒரு குடும்பத்திடம் மட்டுமே உள்ளது.
பணம் பெற்று மோசடி
தி.மு.க. விஞ்ஞான ஊழலுக்குப் பெயர் பெற்றது. இந்த மாடல் தமிழகத்தை ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் சிக்கியுள்ளார்.
வேலைகள் பணத்திற்காக விற்கப்படும்போது நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களின் கனவுகள் தகர்கின்றன. அனைத்து ஆறுகளும் கடலில் சேர்வது போல தமிழகத்தின் ஊழல் பணம் அனைத்தும் ஒரே குடும்பத்திடம் சென்று சேர்கிறது; அது அந்த குடும்பத்தின் சொத்தாக மாறுகிறது.
தானிய சேமிப்பு கிடங்குகள் அமைப்போம், நெல்லுக்கு உரிய விலை கொடுப்போம் என்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் ஆறுகள் நாசமாகி சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு தி.மு.க. பாதுகாப்பு அளிக்கிறது.
கிராம மக்களுக்கான மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது. மத்திய அரசை மக்கள் பாராட்டிவிடுவார்கள் என்ற பயமே இதற்குக் காரணம்.
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு பல பெரிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. தி.மு.க. உறுப்பினரால் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை அனைவரும் அறிந்திருக்கிறோம்.
தமிழக பெண்கள் அச்சமின்றி வாழ்வதை தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யும். குற்றவாளிகள்தான் பயத்துடன் வாழ வேண்டும்; மக்கள் அச்சப்பட தேவையில்லை.
மேற்காசியாவில் நடைபெறும் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதித்துள்ளது. இந்தியாவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
பீதியடைய தேவையில்லை
எந்த சூழ்நிலையிலும் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதே அணுகுமுறையிலேயே இப்போதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மக்கள் யாரும் அச்சப்படவோ பீதியடையவோ தேவையில்லை. போர் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் இந்தியா ஒரு முதிர்ந்த நாடு என்பதை 140 கோடி மக்கள் உலகிற்கு காட்டினர். எந்த சூழ்நிலையையும் நாம் வெற்றிகரமாக சமாளிப்போம்.
வரும் சட்டசபை தேர்தல் தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும். ஊழல் மற்றும் குடும்ப அரசியலா அல்லது வளர்ச்சி அரசியலா என்ற இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
தமிழக மக்கள் வளர்ச்சி அரசியலை தேர்வு செய்வார்கள். நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தையும் வளர்ச்சியடைந்த இந்தியாவையும் உருவாக்குவோம். தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
