திருச்சி: தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அயராது பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து பாடுபடும் என திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி இன்று மாலை சுமார் 4 மணியளவில் திருச்சி வந்தார். தமிழர் பாரம்பரியமான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ₹5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: திருச்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இன்று ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் மூலம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயன் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைப்பதால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இது காற்று மாசுபாட்டை குறைக்கும். இந்த திட்டம் 4 கோடி மரங்கள் நடுவதற்கு சமமான பலனை வழங்கும்.
சேமிப்பு
சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் தொழிற்சாலைகளின் தேவைகளை இந்த ஆலை பூர்த்தி செய்யும். மசகு எண்ணெய் இறக்குமதியை குறைப்பதோடு நாட்டின் பணச் சேமிப்புக்கும் உதவும்.
வேலைவாய்ப்பு
மதுரை வந்தபோது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இன்று புதிய ரயில் சேவைகளும் துவக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் சேவைகள் நாகர்கோயில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளை மற்ற பகுதிகளுடன் இணைக்கின்றன.
புதிய ரயில் சேவைகள் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதோடு உள்ளூர் பொருளாதாரம் மேம்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய திட்டங்கள்
-
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
-
சென்னை அருகே மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ₹1,490 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட மசகு எண்ணெய் கலவை ஆலையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
-
பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.
-
தேசிய நெடுஞ்சாலை 81ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
-
இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நினைவுப் பரிசு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார். பொருநை அருங்காட்சியகத்தின் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
