இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதக் கொள்கையில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, 12 அணு ஆயுதங்கள் உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், இந்தியா தனது அணு ஆயுதக் கொள்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, வழக்கமாக அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏவுவதற்கான அமைப்புகள் தனித்தனியாக பாதுகாப்புடன் வைக்கப்படும். ஆனால் தற்போதைய சூழலில், 12 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்டு, உடனடியாக செயல்படுத்தக்கூடிய நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா இவ்வாறு செயல்படுவது முதல்முறையாகும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு சற்றே அதிகரித்துள்ளதாகவும், நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள ஏவுகணைகளில் குறைந்த எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், “முதலில் அணு தாக்குதல் நடத்தக் கூடாது” என்ற இந்தியாவின் நீண்டகால கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எதிரிகளின் தாக்குதலுக்கு மிக விரைவாக பதிலடி அளிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தகவல்கள் தொடர்பாக மத்திய அரசு அல்லது பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
