புதுடெல்லி: மனைவியை பராமரிப்பது கணவனின் முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமை என சுப்ரீம் கோர்ட்டு முக்கியமாகக் கூறியுள்ளது.
டெல்லியை சேர்ந்த தம்பதியருக்கு 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சில மாதங்களில் ஏற்பட்ட குடும்பத் தகராறுகளால் மனைவி தனியாக வாழத் தொடங்கினார். உடல் மற்றும் மன உளைச்சல் காரணமாக அவர் தாய் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
பின்னர், தனது வாழ்வாதாரத்திற்காக மாதம் ரூ.50,000 வழங்க கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் முதலில் ரூ.8,000 வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மேல்முறையீட்டில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் அதை ரூ.15,000 ஆக உயர்த்தியது.
இதனை மேலும் உயர்த்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு, அந்த தொகையை ரூ.25,000 ஆக உயர்த்தி உத்தரவிட்டது.
தீர்ப்பில், ஜீவனாம்சம் என்பது பெயருக்கு மட்டும் வழங்கப்படக் கூடாது என்றும், மனைவி கண்ணியத்துடன் வாழும் வகையில் போதுமான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், திருமண உறவு இணக்கமாக இருந்த காலத்தில் இருந்த வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக மனைவியின் வாழ்வு இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் கணவருக்கு அளவுக்கு மீறிய சுமை ஏற்படாத வகையில் சமநிலை பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
