புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதத்தில், மத்திய அரசு கூறுவது ஒன்றாக இருந்தாலும், மசோதாவில் உள்ளவை வேறுபடுகின்றன என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்தார்.
மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அவர் பேசுகையில், தொகுதி மறுவரையறை மசோதா இந்திய கூட்டாட்சியை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அவசரமாக பார்லிமென்ட் நடத்தப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெறும் நேரத்தில், அந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியிடப்பட்டதையும் அவர் விமர்சித்தார்.
தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதோடு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன என்றும், ஆனால் புதிய மறுவரையறை மூலம் அவற்றின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என அவர் கவலை தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீட்டை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் அதனை ஒரு காரணமாக கொண்டு தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய விளக்கங்களுக்கும், மசோதாவில் உள்ள பிரிவுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால், தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தொகுதி மறுவரையறை குழு எந்த விதமான அடிப்படையில் செயல்படும் என்பது தெளிவாக இல்லை என்றும், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன் எனவும் அவர் விமர்சித்தார்.
