புதுடெல்லி: தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிபராக பதவியேற்றதற்குப் பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.
ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா வரவுள்ள அவர், ஏப்ரல் 20ஆம் தேதி பிரதமர் மோடியுடன் முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
கப்பல் கட்டுதல், செமிகண்டக்டர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு துறைகள் போன்ற முக்கியமான துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கையும் இரு நாடுகளும் நிர்ணயித்துள்ளன.
