திருச்சி: கடந்த 5 ஆண்டுகளாக திமுக நடத்தி வரும் மக்கள் விரோத ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் திமுக ஆட்சி துரோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக ஆட்சியில் அமைச்சர் கே. என். நேரு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத் துறையில் பணியிடங்கள் வழங்குதல், ஒப்பந்தங்கள் மற்றும் பணியிடமாற்றங்கள் தொடர்பாக பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை பலமுறை கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் தெரிவித்தார். நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டபோதும், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒரு ஊழல் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீண்டகாலம் சிறையில் இருந்ததை குறிப்பிட்ட அவர், பல வழக்குகள் உள்ள நிலையில் கே.என். நேருவுக்கு ஆதரவு குறைந்து வருவதாக தெரிவித்தார்.
திருச்சி மாநகரின் நிலைமை குறித்தும் அவர் விமர்சித்தார். 2015ஆம் ஆண்டு சுத்தமான மாநகரங்களின் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த திருச்சி, தற்போது 59ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், குடிநீர் மற்றும் கழிவுநீர் கலப்பு பிரச்சினையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
இந்த சூழலில், திருச்சி மேற்கு தொகுதியில் அமமுக வேட்பாளர் ராஜசேகரை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
