சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பை மீறி நிறைவேற்றினால் அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டியிருக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கு தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி, மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த சட்டமுன்வடிவு முழுமையாக ஏமாற்றுத் திட்டமாக இருப்பதாகவும், அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மசோதாவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், எதிர்காலத்தில் மத்திய அரசு விரும்பும் வகையில் மாநிலங்களின் தொகுதி அமைப்பை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.
இந்த மசோதா அவசரமாக நிறைவேற்றப்படக் கூடாது என்றும், மத்திய அரசு இதனை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எண்ணிக்கை பலத்தை அடிப்படையாக கொண்டு மசோதாவை நிறைவேற்றினால், அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் போல, தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்த சட்டப் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
