புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தவும், தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
மத்திய அரசு, 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்துள்ளது. அதேபோல், சட்டசபை மற்றும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யவும் புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 131வது திருத்த மசோதா-2026, தொகுதி மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய மூன்று மசோதாக்கள் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முதல் இரண்டு மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இல்லை என்றும், தொகுதிகள் அதிகரிக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் 59 ஆக உயர்வதுடன், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தொகுதிகள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மசோதாக்கள் மீது மக்களவையில் இன்று தொடர்ந்து விவாதம் நடைபெறுகிறது. விரிவான விவாதத்திற்குப் பிறகு, இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
