புதுடில்லி: “மக்களின் அன்றாட பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து பாதிப்பு காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாக, கடந்த நான்கு ஆண்டுகளாக நிலைத்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், கடந்த இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.20 மற்றும் டீசல் விலை ரூ.7.38 உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கும், டீசல் ரூ.99.55க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த கே.சி. வேணுகோபால், “பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கவலைகளைத் தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்” என்றார்.
வேலைவாய்ப்பின்மை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
“நாட்டில் வேலைவாய்ப்பின்மை உச்சத்தை எட்டியுள்ளது. வேலை தேடி இளைஞர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்” என்றும் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
