குருவாயூர் கோயிலில் முதல்வருக்கு விஐபி தரிசனம்? கேரள அரசுக்கு பாஜக கேள்வி
திருவனந்தபுரம்: குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசனுக்கு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டதாக பாஜக புகார் அளித்துள்ளது.
அண்மையில் கேரள முதல்வராக பதவியேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குருவாயூர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கோயிலில் பிரசித்தி பெற்ற ‘துலாபாரம்’ நேர்ச்சையையும் அவர் நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமாரின் மகன் திருமண நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிலையில், விடுமுறை நாள்களில் கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு தடை விதித்துள்ள கேரள உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முதல்வருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் பி. கோபாலகிருஷ்ணன், குருவாயூர் தேவஸ்வம் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு தரிசனத்திற்கு தடை இருந்த நேரத்திலும், முதல்வர் மற்றும் அவருடன் சென்ற தலைவர்களுக்கு விஐபி தரிசன அனுமதி வழங்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறியுள்ளனர்” என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட கோபாலகிருஷ்ணன், “விடுமுறை நாள்களில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.4,500 கட்டணம் செலுத்தி ‘ஸ்ரீகோயில் நெய்விளக்கு’ ரசீது பெறுவது கட்டாயம்.
ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றாமல் முதல்வர் தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் உள்ளிட்ட சிலர் கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில், தேவஸ்வம் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், “விடுமுறை நாள் விதிமுறைகளின்படி தேவையான ரூ.4,500 கட்டணம் செலுத்தி ‘ஸ்ரீகோயில் நெய்விளக்கு’ ரசீது பெற்ற பிறகே முதல்வர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குருவாயூர் தேவஸ்வம் தலைவர் ஏ.வி. லோபிநாத் கூறுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை.
ஆனால், முதல்வரின் வருகையால் சில பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. அது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
