சிங்கப்பூர்: BYJU’S கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் Byju Raveendranக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஒருகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய பைஜுஸ் நிறுவனம், தற்போது கடுமையான நிதி மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. 2022ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அதன் மதிப்பு பூஜ்ஜியமாகிவிட்டதாக பைஜு ரவீந்திரனே ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், 1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றங்களில் பல்வேறு சட்டப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், கத்தார் முதலீட்டு வாரியத்தின் துணை நிறுவனமான Qatar Holdings தொடர்ந்த வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து Bloomberg வெளியிட்ட தகவலின்படி, 2024 ஏப்ரல் மாதம் முதல் தனது சொத்து விவரங்களை வெளியிடுமாறு நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை பைஜு ரவீந்திரன் தொடர்ந்து மீறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், பைஜு ரவீந்திரனுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்ததுடன், சுமார் ரூ.75 லட்சம் நீதிமன்ற செலவுத்தொகையையும் செலுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் உடனடியாக அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
