கோவை போத்தனூரில், பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில், கோவை தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக பணிபுரிந்த எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கோவைபுதூர் பகுதியில் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் கமாண்டன்ட் ஆக எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் 2023 ஆம் ஆண்டு முதல் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார்.
இவர் அங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அரசின் அனுமதியின்றி தலைமையிடம் கடந்து செல்லக்கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் செந்தில்குமார் நேற்று கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் கமாண்டன்ட் கைது செய்யப்பட்ட சம்பவம் பட்டாலியன் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
