புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா-நார்டிக் உறவில் பொற்காலம்: மோடி
ஆஸ்லோ: இந்தியா மற்றும் நார்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் புதிய பொற்காலத்தை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து நார்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. நார்வே சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா-நார்டிக் நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நமது பகிரப்பட்ட ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை நம்மை இயற்கையான கூட்டாளிகளாக மாற்றுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 4 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் நார்டிக் நாடுகளின் முதலீடு முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கிருந்து வரும் முதலீடு 200 மடங்கு அதிகரித்துள்ளது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வர அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளோம். இதில் இரட்டை நிலைப்பாடு அல்லது சமரசத்திற்கு இடமில்லை. சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் அவசியமானது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், நார்டிக் நாடுகளின் பொருளாதாரத்திற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
2025 அக்டோபர் முதல் நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதில் டென்மார்க், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் கூட்டாளிகளாக இணைந்துள்ளன.
இந்த புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா மற்றும் நார்டிக் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் புதிய பொற்காலத்தை நோக்கி நகரும்,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
